ஐயடிகள் காடவர்கோன் நாயனார் அருளியது |
பதினோராம் திருமுறை |
1. க்ஷேத்திரத் திருவெண்பா |
145
ஓடுகின்ற நீர்மை ஒழிதலுமே உற்றாரும்
கோடுகின்றார் மூப்புங் குறுகிற்று - நாடுகின்ற
நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன் நன்னெஞ்சே
தில்லைச்சிற் றம்பலமே சேர். |
1 |
146
கடுவடுத்த நீர்கொடுவா காடிதா என்று
நடுநடுத்து நாவடங்கா முன்னம் - பொடியடுத்த
பாழ்கோட்டஞ் சேராமுன் பன்மாடத் தென்குடந்தைக்
கீழ்க்கோட்டஞ் செப்பிக் கிட. |
2 |
147
குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி
நொந்திருமி ஏங்கி நுரைத்தேறி - வந்துந்தி
ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை. |
3 |
148
காளை வடிவொழிந்து கையுறவோ டையுறவாய்
நாளும் அணுகி நலியாமுன் - பாளை
அவிழ்கமுகம் பூஞ்சோலை ஆருரற் காளாய்க்
கவிழ்கமுகம் கூம்புகஎன் கை. |
4 |
149
வஞ்சியன நுண்ணிடையார் வாள்தடங்கண் நீர்சோரக்
குஞ்சி குறங்கின்மேற் கொண்டிருந்து - கஞ்சி
அருத்தொருத்தி கொண்டுவா என்னாமுன் நெஞ்சே
திருத்துருத்தி யான்பாதஞ் சேர். |
5 |
150
காலைக் கலையிழையாற் கட்டித்தன் கையார்த்து
மாலை தலைக்கணிந்து மையெழுதி - மேலோர்
பருக்கோடி மூடிப் பலரழா முன்னம்
திருக்கோடி காஅடைநீ சென்று. |
6 |
151
மாண்டுவாய் அங்காவா முன்னம் மடநெஞ்சே
வேண்டுவாய் ஆகி விரைந்தொல்லைப் - பாண்டவாய்த்
தென்னிடைவாய் மேய சிவனார் திருநாமம்
நின்னிடைவாய் வைத்து நினை. |
7 |
152
தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாது
பெட்டப் பிணமென்று பேரிட்டுக் - கட்டி
எடுங்களத்தா என்னாமுன் ஏழைமட நெஞ்சே
நெடுங்களத்தான் பாதம் நினை. |
8 |
153
அழுகு திரிகுரம்பை ஆங்கதுவிட் டாவி
ஒழுகும் பொழுதறிய ஒண்ணா - கழுகு
கழித்துண் டலையாமுன் காவிரியின் தென்பால்
குழித்தண் டலையானைக் கூறு. |
9 |
154
படிமுழுதும் வெண்குடைக்கீழ்ப் பாரெலாம் ஆண்ட
முடியரசர் செல்வத்து மும்மைக் - கடியிலங்கு
தோடேந்து கொன்றையந்தார்ச் சோதிக்குத் தொண்டுபட்
டோடேந்தி உண்ப துறும். |
10 |
155
குழீஇயிருந்த சுற்றம் குணங்கள்பா ராட்ட
வழீஇயிருந்த அங்கங்கள் எல்லாம் - தழீஇயிருந்தும்
என்னானைக் காவா இதுதகா தென்னாமுன்
தென்னானைக்கா அடைநீ சென்று. |
11 |
156
குயிலொத் திருள்குஞ்சி கொக்கொத் திருமல்
பயிலப் புகாமுன்னம் நெஞ்சே - மயிலைத்
திருப்புன்னை யங்கானல் சிந்தியா யாகில்
இருப்பின்னை யங்காந் திளைத்து. |
12 |
157
காளையர்கள் ஈளையர்க ளாகிக் கருமயிரும்
பூளையெனப் பொங்கிப் பொலிவழிந்து - சூளையர்கள்
ஓகாளஞ் செய்யாமுன் நெஞ்சமே உஞ்சேனை
மாகாளங் கைதொழுது வாழ்த்து. |
13 |
158
இல்லும் பொருளும் இருந்த மனையளவே
சொல்லும் அயலார் துடிப்பளவே - நல்ல
கிளைகுளத்து நீரளவே கிற்றியே நெஞ்சே
வளைகுளத்துள் ஈசனையே வாழ்த்து. |
14 |
159
அஞ்சனஞ்சேர் கண்ணார் அருவருக்கும் அப்பதமாய்க்
குஞ்சி வெளுத்துடலங் கோடாமுன் - நெஞ்சமே
போய்க்காடு கூடப் புலம்பாது பூம்புகார்ச்
சாய்க்காடு கைதொழுநீ சார்ந்து. |
15 |
160
இட்ட குடிநீர் இருநாழி ஓருழக்காச்
சட்டஒரு முட்டைநெய் தான்கலந் - தட்ட
அருவாச்சா றென்றங் கழாமுன்னம் பாச்சில்
திருவாச்சி ராமமே சேர். |
16 |
161
கழிந்தது நென்னற்றுக் கட்டுவிட்டு நாறி
ஒழிந்த துடல்இரா வண்ணம் - அழிந்த
திராமலையா கொண்டுபோ என்னாமுன் நெஞ்சே
சிராமலையான் பாதமே சேர். |
17 |
162
இழவாடிச் சுற்றத்தார் எல்லாருங் கூடி
விழவாடி ஆவிவிடா முன்னம் - மழபாடி
ஆண்டானை ஆரமுதை அன்றயன்மால் காணாமை
நீண்டானை நெஞ்சே நினை. |
18 |
163
உள்ளிடத்தான் வல்லையே நெஞ்சமே ஊழ்வினைகள்
கள்ளிடத்தான் வந்து கலவாமுன் - கொள்ளிடத்தின்
தென்திருவாப் பாடியான் தெய்வமறை நான்கினையும்
தன்திருவாய்ப் பாடியான் தாள். |
19 |
164
என்னெஞ்சே உன்னை இரந்தும் உரைக்கின்றேன்
கன்னஞ்செய் வாயாகிற் காலத்தால் - வன்னெஞ்சேய்
மாகம்பத் தானை உரித்தானை வண்கச்சி
ஏகம்பத் தானை இறைஞ்சு. |
20 |
165
கரம்ஊன்றிக் கண்ணிடுங்கிக் கால்குலைய மற்றோர்
மரம்ஊன்றி வாய்குதட்டா முன்னம் - புரம்மூன்றுந்
தீச்சரத்தாற் செற்றான் திருப்பனந்தாள் தாடகைய
ஈச்சரத்தான் பாதமே ஏத்து. |
21 |
166
தஞ்சாக மூவுலகும் ஆண்டு தலையளித்திட்
டெஞ்சாமை பெற்றிடினும் யான்வேண்டேன் - நஞ்சங்
கரந்துண்ட கண்டர்தம் ஒற்றியூர் பற்றி
இரந்துண் டிருக்கப் பெறின். |
22 |
167
நூற்றனைத்தோர் பல்லூழி நுண்வயிர வெண்குடைக்கீழ்
வீற்றிருந்த செல்வம் விழையாதே - கூற்றுதைத்தான்
ஆடரவங் கச்சா அரைக்கசைத்த அம்மான்தன்
பாடரவங் கேட்ட பகல். |
23 |
168
உய்யும் மருந்திதனை உண்மின் எனஉற்றார்
கையைப் பிடித்தெதிரே காட்டியக்காற் - பைய
எழுந்திருமி யான்வேண்டேன் என்னாமுன் நெஞ்சே
செழுந்திரும யானமே சேர். |
24 |
திருச்சிற்றம்பலம் |